இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தப் பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் துறை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த விதிமுறையை மீறும் நபர்களுக்கு சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த நான்கு மாதங்களில் கைப்பற்றப்பட்ட 232,804,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று கெரவலப்பிட்டிய குப்பை-மின்சக்தி நிலையத்தில் எரித்து அழிக்கப்பட்டன.

இந்த கைப்பற்றப்பட்ட சிகரெட் கையிருப்பின் மொத்த மதிப்பு ரூ. 305 மில்லியன் ஆகும். இவை உள்ளூர் சந்தையில் விடப்பட்டிருந்தால், அரசுக்கு ரூ. 271 மில்லியன் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழிப்பு நடவடிக்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள், இலங்கை சுங்கத் துறை ஊடகப் பேச்சாளரும் சுங்கத் துறை இயக்குநருமான வந்தனா புஞ்சி ஹேவா உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

சிகரெட் கொண்டு வருதல் மீதான தடை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை சுங்கத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply