நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை – சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி.
மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் குறித்துச் சமூகம் கொண்டுள்ள மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் மனநலச் சுகாதாரத் துறையின் முன்னோடி நிறுவனமான அங்கொடை தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் (NIMH) நூற்றாண்டு விழா பெப்ரவரி 03ஆம் திகதி அந்த நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட புகைப்படக் கண்காட்சியையும் மனநலச் சேவைகளைப் பெறுபவர்களின் ஆக்கங்கள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
நினைவுவிழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த நூறு ஆண்டுகளாக இந்நிறுவனம் ஆற்றி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் சமூக மனநலச் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமெனக் கூறினார்.
மனநலத் துறை என்பது வெறுமனே மருத்துவச் சிகிச்சையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. பல வெளித்துறைகளை ஒருங்கிணைத்து மிகவும் பரந்த மற்றும் மனிதாபிமான முறையிலான சிகிச்சை முறையொன்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக, மனநலச் சேவைகளைப் பெறுபவர்கள் தொடர்பாகச் சமூகம் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது.
மருத்துவமனை ஊழியர்களின் சிறப்பான அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், நோயாளிகள் மீது மனிதநேயத்துடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜயமுனி, முக்கியமானதொரு விடயத்தை வெளிப்படுத்தினார். அதாவது, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைத் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான ஆரம்ப வரைவு ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் இச்சட்டம் குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களையும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் மூலம் நவீன மருத்துவ முறைகளைச் சட்ட முறைமைக்குள் உள்வாங்கி, நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான பிரதிநிதி மருத்துவர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் தம்மிக அலகப்பெரும உள்ளிட்ட அதிதிகள், மருத்துவர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.