பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வௌியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள்,“ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்” என்று தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பறிக்கப்பட்டது தொடர்பிலும், அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரங்க விவாதத்திற்கு  அழைப்பு

Social Share

Leave a Reply