கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்திர திருவிழா ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்திர திருவிழா இன்று (27.02) ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உற்சவத்துக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை இயக்கப்படவுள்ளன.

இதனுடன், கச்சதீவுக்கான படகுச் சேவை குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து இன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் கடற்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என்பதால், யாத்திரிகர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கு பயணிக்கும் ஒருவருக்கான ஒருவழி படகுக் கட்டணம் ரூபா 1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாளை (28.02) காலை உணவு மட்டும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply