இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள டாஜ் பேலஸ் ஹோட்டலில் 2026 உலக நிலைத்த வளர்ச்சி உச்சி மாநாடு (WSDS) பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெற்றது. “Multilateralism as a Force for Hope” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிலைத்த நிலை வளர்ச்சியை முன்னேற்ற இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளை வலியுறுத்தினார். காலநிலை நிதி வசதிகளைப் பெறுதல் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவைக்கு (UNEA) இலங்கை முன்வைத்த பரிந்துரையும் இவ்வேளையில் நினைவூட்டப்பட்டது. தென் ஆசிய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை (SACEP) வலுப்படுத்துவது குறித்தும் தெரிவித்தார்.
இச்சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நிலைத்த வளர்ச்சி தொடர்பான ஒத்துழைப்புகளைப் பற்றி கலந்துரையாடினார். மேலும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) பிரதிநிதிகளுடனும் விசேட சந்திப்பு நடத்தப்பட்டு, இலங்கையின் தொழிற்துறையை பசுமை பொருளாதார நோக்கில் முன்னேற்றுவதற்கான தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோல் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) நடைபெற்ற சந்திப்பில், இலங்கையில் அமுல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் எதிர்கால நிலைத்த பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. 2026 உலக நிலைத்த நிலை வளர்ச்சி உச்சி மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டதாக இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.