T20 முதல் அரையிறுதிப் போட்டி இன்று!

டி 20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குழு நிலைப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியபோது தென்னாபிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தென்னாபிரிக்க அணியின் தலைவரான ஏய்டன் மார்க்ரம் முக்கிய ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார். அவரை கட்டுப்படுத்தும் பொறுப்பு நியூசிலாந்து அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் மற்றும் கோல் மக்கொஞ்சி மீது உள்ளது. அதேசமயம் டேவிட் மில்லர், டெவால்ட் பிறெவிஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அடங்கிய மத்திய வரிசையையும் சமாளிப்பது நியூசிலாந்துக்கு சவாலாக அமையும்.

மேலும், தென்னாபிரிக்காவின் தொடக்கத் துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் மற்றும் ரயான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூசனுக்கும் இடையிலான மோதல் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், தென்னாபிரிக்காவின் மார்கோ யான்சன் தனது பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர் என்பதால், போட்டியின் போக்கு அவரின் செயல்பாட்டினாலும் தீர்மானிக்கப்படலாம்.

பனிப்பொழிவு தாக்கம் காணப்படும் சூழலில், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கே மேலாதிக்கம் கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், தனது குழந்தை பிறப்பை முன்னிட்டு இங்கிலாந்துக்குச் சென்றுள்ள நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்றி, ஈரான்–அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொடர்பான பதற்றமான சூழ்நிலையால் இப்போட்டிக்கு முன் அணியுடன் இணைவது சிரமமாக உள்ளது. இதனால், அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply