இவ்வாண்டு இதுவரை சுமார் 1,800 பேர் எலி காய்ச்சல் (Leptospirosis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருது தெரிவித்த சிறப்பு மருத்துவர் துஷானி தாபரேரா, காலி, மாத்தறை, களுத்துறை, ரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகளவில் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடத்திற்கு சுமார் 13,000 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டுகளில் 100–300 மரணங்கள் வரை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மருத்துவர் கோலித ஜயசுந்தர தெரிவித்ததாவது, காய்ச்சல், கடும் தலைவலி, மூட்டு வலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்று வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நோய் சிகிச்சை தாமதமானால் சிறுநீரகம், நுரையீரல் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.