பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மூதூர் – சம்பூர் 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக கடந்தாண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (14/12) குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியனின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இவருக்கு எதிரான வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய ரனித்தா மயூரன் குழுவினரால் சிரேஷ;ட சட்டத்தரணி ரத்தினவேலின் தலைமையில்,திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அதற்கமைய இவ்வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதவான் மா.இளஞ்செளியன் பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.
எனினும் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
(திருகோணமலை நிருபர்)