சட்டவிரோதமான வைத்தியர் இடமாற்றங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (31.03) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக. அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
எனினும், மகப்பேறு வைத்தியசாலைகள், குழந்தைகள் வைத்தியசாலைகள், மகரகம “அபேக்ஷா” புற்றுநோய் வைத்தியசாலை, சிறப்பு சிறுநீரக சிகிச்சை அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநலம் மருத்துவ நிறுவனம் ஆகிய இடங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமல்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசு தக்க கவனம் செலுத்தவில்லை எனில், எதிர்காலத்தில் மேலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்றும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை கேட்டு தீர்வு காண அரசு தயார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.