இலங்கை கடற்படை, இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணு (CBRN) அவசரநிலை நிலைகளுக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை துறைமுகத்தில் சிறப்பு பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையின் CBRN பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சியில் திருகோணமலை அனர்த்த மேலாண்மை மையம், இலங்கை துறைமுக அதிகார சபை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (திருகோணமலை), தீயணைப்பு சேவை திணைக்களம், சைனா பே வான்படை அகடமி, இலங்கை இராணுவத்தின் 22வது படை பிரிவு மற்றும் சீனக்குடா பொலிஸார் மற்றும் பல அமைப்புகள் இணைந்து பங்கேற்றன.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த பயிற்சியின் கோட்பாட்டு அமர்வுகளில், இரசாயன அபாயங்களை அடையாளம் காணுதல், நச்சு இரசாயனங்களை கையாளுதல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குதல் மற்றும் CBRN அச்சுறுத்தல்களைப் பற்றிய அறிவை மேம்படுத்துதல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதனுடன், நடைமுறை பயிற்சிகளில் இரசாயன அவசரநிலைகளில் பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்துவது, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் ஆபத்தான இரசாயனக் கலவைகளை பாதுகாப்பாக அகற்றுவது போன்றவற்றில் செயற்முறை அனுபவமும் வழங்கப்பட்டது.