இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களினால், திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, இன்று (29.04.2026) இலக்கம் 2486/16 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அதன் தலைவர் உள்ளிட்ட செயற்குழுவினர் பதவி விலகியமையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, திருத்தப்பட்ட விளையாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு தற்காலிக நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை உயர்த்துவதில் கிரிக்கெட் விளையாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தும்; கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் உயர்தரத்தைப் பேண வேண்டிய காலத்தின் தேவையை ஏற்றுக்கொண்டும்; விளையாட்டு மற்றும் அதன் பங்குதாரர்களின் நலனுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாற்றக் குழு (SRI LANKA CRICKET TRANSFORMATION COMMITTEE) இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குழு உறுப்பினர்கள்:
திரு. எரான் விக்ரமரத்ன – தலைவர்
திரு. சிதத் வெத்திமுனி
திரு. ரொஷான் மஹாநாம
திரு. குமார் சங்கக்கார
திரு. பிரகாஷ் ஷாஃப்டர்
திருமதி. அவந்தி கொழும்பகே
திரு. துஷிர ரதெல்ல
திரு. டினால் பிலிப்ஸ், ஜனாதிபதி சட்டத்தரணி
திரு. உපුල් குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வருடாந்த பொதுக்கூட்டத்தை கூட்டி புதிய நிர்வகிகளைத் தெரிவு செய்யும் வரை, அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிர்வகிப்பதற்கான அதிகாரம் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் குமார கமகே இந்த வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.