நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்ணை மறைமுகமாக வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2026 ஏப்ரல் 29ம் திகதி 119 அவசர அழைப்பின் மூலம் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நாரஹேன்பிட்ட பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். ஏப்ரல் 27ம் திகதி ஃபைப் ரோட்டில் அமைந்துள்ள ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெண் மருத்தவர் குளியலறையில் இருந்தபோது, ஜன்னல் வழியாக அவர் வீடியோ எடுக்கப்பட்டதாக குறித்த முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதே ஹோட்டலில் வேறு அறைகளில் தங்கியிருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 18 மற்றும் 19 வயதுடைய இவர்கள் பன்னல மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்காக கொழும்பு வந்திருந்ததுடன், அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் அதே ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 2026 ஏப்ரல் 29ம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா ரூ. 500,000 தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு மீண்டும் 2026 மே 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.