புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்களுக்கு இன்னும் செலுத்தப்படவில்லை – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமை கொடுப்போம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கம், இப்போது வேண்டுமென்றே நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை சீரழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.10 பில்லியன் தொகையை செலுத்தாது இருந்து வருகின்றது. மாதந்தோறும் ரூ. 2.5 பில்லியன் மேலதிகமாக இதனோடு சேர்ந்துகொண்டே போகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08.05) விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் அனல் மின்நிலையம் மற்றும் எரிபொருள் மின்நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் அரசியல் மேடைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவோம் என பரப்புரைகளைச் செய்து வந்தது. உண்மையில் எரிபொருள் மற்றும் அனல் மின்நிலைய மாபியாவின் கைக்கூலியாக மாறிவிட்டது. இதனால் அனல் மின்நிலையங்களில் ஒரு மின் அலகு உற்பத்திக்கு ரூ. 100-க்கும் அதிகமான செலவு ஆகினும், இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால் 389 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வேலைத்திட்டங்கள் ஆபத்தில்!

கூரை மேல் சூரிய மின்சார திட்டங்களைத் தவிர, காற்றாலை, சிறு நீர்மின்சாரம், உயிரியல் பாகம் உள்ளிட்ட 389 திட்டங்கள் ஆபத்தான நிலைக்கு ஆளாகி காணப்படுகின்றன. இவை ஒட்டுமொத்த மின்சார கட்டமைப்பிற்கு 1,073 மெகாவாட்டைப் பெற்றுத் தருகின்றன. தரமற்ற நிலக்கரி ஊழல் திட்டத்தால் நாடு தினமும் பாரிய நிதி நட்டத்தைச் சந்தித்து வருகின்றது. இழந்த மின்சாரத்தை உயர் செலவில் எரிபொருள் மின்நிலையங்கள் வழியாக உற்பத்தி செய்கின்றனர். பகல் நேர மின் தேவையில் 70% க்கும் அதிகமானதை நிறைவேற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாட்டின் அந்நியச் செலாவணியையும் பாதுகாக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனல் மின்நிலையங்களை மேம்படுத்தும் உலகின் ஒரே அரசாங்கம் நமது நாட்டில்தான் காணப்படுகின்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற அரசாங்கம், தற்சமயம் அனல் மின்நிலைய மற்றும் எரிபொருள் மாபியாவின் கைப்பாவையாக மாறிவிட்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உரிமையாளர்கள் வங்கிகளிடம் கடன்பட்டு, தமது முதலீட்டு நம்பிக்கைகளையும் கைவிட்டுள்ளனர். முதலீடு செய்ய தயாராக இருந்த தொழில்முனைவோரும் சோர்வடைந்துபோயுள்ளனர். இந்த தவறான செயலிலிருந்து இப்போதாவது விலகுமாறும், உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தும் வேளையில்,அனல் மின்நிலையங்களை மேம்படுத்தும் உலகின் ஒரே அரசாங்கமாக திசைகாட்டி அரசாங்கமே திகழ்ந்து வருகின்றது என்றும், ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக போராடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply