அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் – பிரதமர்!

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பு மாவட்டச் செயலகத்தில் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாவட்டத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கிராமப்புற வீதி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டிற்காக 195 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான தமது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கனவே 240 திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 127 மில்லியன் ரூபா பெறுமதியான 126 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் வீதி வலையமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அபாயகரமான இடங்களில் பாதுகாப்பு வேலிகள் மற்றும் சமிக்ஞைப் பலகைகளை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு கிராமப்புறப் பாலங்களை நிர்மாணிப்பதற்காக 100 மில்லியன் ரூபாவும், 50 கிலோமீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உத்தியோகத்தர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “பிரஜா சக்தி” திட்டத்திற்காக 1,036 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அத்திட்டங்கள் அனைத்தையும் 2026 நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு பிரதமர் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், விளையாட்டு அமைச்சின் பங்களிப்புடன் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல், புத்தசாசன மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கீழ் விசேட திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, அசித நிரோஷன, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply