பிரதமருக்கும் பிரித்தானிய கவுன்சில் கல்வி நிபுணர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தமது நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினர். இலங்கையின் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காகத் தொழில்நுட்ப உதவிகள், ஆசிரியர் அபிவிருத்தி மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் கல்வித் துறைக்கு பிரித்தானிய கவுன்சில் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இத்தகைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply