பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயற்பாடுகள் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்

நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு  புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் – பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கைத்தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியன இணைந்து செயல்படுத்தும் விசேட வேலைத்திட்டம் குறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (09) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

உள்நாட்டு படகு மற்றும் படகு சார்ந்த உற்பத்தித் துறையானது தற்போது நாட்டிற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு முக்கிய தொழில்துறையாகும். எனினும், உற்பத்தி செய்யப்படும் பெரிய படகுகளை பாதுகாப்பாக கடலில் இறக்குவதற்கு முறையான வசதிகள் இல்லாததால், உற்பத்தியாளர்களும் வெளிநாட்டு கொள்வனவாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதற்கு உடனடி தீர்வாக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் முன்முயற்சியில், 76 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பேருவளை கடற்றொழில் துறைமுக வளாகத்தில் புதிய “படகு இறங்குத்துறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவுள்ள கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், குறித்த படகு இறங்குத்துறையின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை ‘இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்’ (CFHC) உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சுகள் தனித்தனியாகச் செயல்படாமல், இவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும் என விசேடமாக வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தை மகத்தான வெற்றியாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடல்சார் தொழில்துறை சம்மேளனம் மற்றும் பேருவளை பலநாள் படகு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒரே தேசிய நோக்கத்திற்காக கைகோர்த்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுனுஆராச்சி உட்பட கடற்றொழில் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply