கொழும்பு நகரிலும் ஏனைய சில இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு விற்றுத் தேவையான வெளிநாட்டு நாணயங்களை அரசாங்கம் பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று (16/12) கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.
ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் இலங்கையர்களின் நிலங்களில் வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதைக் காண முடியும். அதன் ஒரு கட்டமாக இலங்கை சதோச களஞ்சியசாலை, நாரஹேன்பிட்டி, தும்முல்லை மற்றும் ஒருகொடவத்தையில் உள்ள சில காணிகள் என்பன விற்கப்படவுள்ளன என்றார்.
இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கு, அந்த அரசாங்கம் கடன் வாங்க நேரிட்டதால், பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த அரசாங்கத்தை குறை கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக கடன் வாங்கப்பட்ட நிதிக்கு ஈடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் வடக்கில் உள்ள சில தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.