இலங்கையில் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரியளவில் பஞ்சம் ஏற்படப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சித்தாண்டியில் இன்று (19/12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் இன்று விவசாயம் வீழ்ச்சி கண்டுள்ளது. யூரியாவின் விலை 30,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. யூரியாவுக்கு 30,000 ரூபா செலவழித்தால் நெல்லை எவ்வளவுக்கு கொள்வனவு செய்வது? நெல்லின் விலை உயர்வடையுமானால், அரிசியை எவ்வளவு விலைக்கு கொள்வனவு செய்வது?பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யூரியாவை 5,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 30,000 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் கேள்விப்பட்டேன்.
அதுமட்டுமின்றி தமிழர் வாழும் பிரதேசங்களில் மாத்திரம் நெல் மூட்டைகளை தேடி அதிகாரிகள் வருகின்றனர். பொலன்னறுவையில் இலட்ச இலட்சமாக நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை யாரும் சென்று பிடிப்பதில்லை.
அத்துடன் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலங்கள் இற்றை வரை மேய்ச்சல் தரை நிலங்களாக உறுதி செய்யப்படாமையால் பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த தரை நிலங்களின் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பாக நானும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
இந்த தரை நிலங்கள் பறிக்கப்பட்டால் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் விவசாயம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும்” என சாணக்கியன் எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார்.