முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று (19/12) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் மாணவியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கான காரணம் என்றும் அவர் இரண்டு மாத கர்ப்பமாக உள்ளமையும் உறுதியாகியுள்ளது.
தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற நிதர்சனா மாலை வரை வீடு திரும்பாதமையால் குடும்பத்தார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றை அளித்தனர்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தீவிர தேடுதலை அடுத்து குறித்த சிறுமி சென்றிருந்த சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் (18/12) சடலமாக உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
வலது கை அற்ற நிலையில் மீட்கப்பட்ட சடலம் மீதான பிரேத பரிசோதனை, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மாணவியின் மரணம் சம்பவித்துள்ளமை இதன்போது உறுதியானது.
இந்நிலையில் பிரேத பிரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரியின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.