‘தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது’

தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் நேற்று (21/21) நடைபெற்ற மாநாடானது, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இம்மாநாடானது, ‘நடக்காது, நடக்க முடியாது என்று ஆரூடம் கூறியவர்களையும், ‘நடக்கக் கூடாது’ என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநாடு குறித்து மனோ எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய நடவடிக்கையாக, தமிழ் பேசும் கட்சிகளின் பொது ஆவண பிரதியானது, தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களிடம் இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதோடு, இந்த ஆவண பிரதியில் இரு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன .

குறித்த ஆவணம் தொடர்பான கடிதம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, அதில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டுள்ளன .

நேற்றைய ஒன்றுக்கூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றியிருந்த நிலையில், கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றிருந்தன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே ஆகும். ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை. ஆவணங்கள் இன்னமும் பிரதி கட்டத்திலேயே இருக்கும் நிலையில், அவை இன்னமும் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்படலாம்.

இறுதி வடிவங்கள் போதியளவு நேரங்களை எடுத்து தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் அதில் கையெழுத்திடுவார்கள்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கௌரவமாக அதேவேளை, சமத்துவமாக வாழ வழி வகுக்கும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில் சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.

அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவானது, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன். இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய உண்மை செய்திகளை பறிமாறுகிறேன். எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்’ என்று மனோ எம்.பி கூறினார்.

'தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது'

Social Share

Leave a Reply