‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’

அரசாங்கம் இன்று விவசாய போராட்டம் பற்றி பேசினாலும், நாட்டில் ‘பஞ்ச யுத்தம்’ நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (26/12) முன்னெடுக்கப்பட்ட ‘மனித நேயப் பயணம்’ என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வீட்டுக்கு வீடு கேஸ் சிலிண்டர் வெடிக்கும் நாடு இந்த நாடு தான். மக்களுக்கு நிவாரணப் பொதி தருவதாக சில அமைச்சர்கள் பந்தயம் கட்டினாலும், கொடுக்கப்பட்ட பொதிகளில் சகிப்பின்மை, அழுத்தம், பணவீக்கம், சோகம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவையே உள்ளடங்கியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் இயற்கை பேரழிவுக்கு பதிலாக தாங்களாகவே உருவாக்கிய பேரழிவின் மூலம் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.

அன்று இயற்கை சுனாமியால் பத்தாயிரக்கணக்கானோர் இறந்தனர், இன்று ‘மொட்டு சுனாமியால்’ முழு நாடும் பெரும் பேரழிவில் உள்ளது’ எனத் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை நகரிற்கும் சந்தைக்கும் வருகைதந்த மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட ‘குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு’ என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடையே விநியோகித்தார்.

'குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு'

Social Share

Leave a Reply