இந்திய பிரதமரிடம் கையளிக்கவென தயாரிக்கப்பட்டு வரும் இலங்கையின் தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஒப்பந்த செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், பொது ஆவண ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்திருந்த நிலையில், வெளியில் இருந்து தமது ஒத்துழைப்புகளை வழங்குமென தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டறிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன் எம்.பியும், பழனி திகாம்பரம் எம்.பியும், இராதா கிருஸ்ணன் எம்.பியும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அதில், கூட்டு செயற்பாட்டை ஆரம்பித்த ஏற்பாட்டாளர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி, இணைப்பாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு, மலையக தமிழரின் அபிலாசைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், தமிழக முதல்வர், இலங்கை ஜனாதிபதி, உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும் என்ற கட்சியின் முடிவுகளும், கூட்டு செயற்பாடு தொடர்பான ஆரம்ப நிலை தொடக்கம் இறுதி நிலை வரை குறித்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அந்தவகையில், முதல் நிலை கலந்துரையாடலுக்கு அமைய, இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13ஆவது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாண சபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல் என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரில் ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் கடந்த நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.
பிரதான நோக்கம் என்ற வகையில், இலங்கை அரசமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ஈம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல பொது நோக்கமாகும்.
இலங்கை தமிழரசு கட்சி உள்வாங்கும் எண்ணக்கருவுக்கு அமைய, இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, த.மு.கூ மனோ கணேசன் எம்பியும், ஸ்ரீ.மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும் தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணி நிராகரித்தது.
பொது ஆவணக் கடிதம் தொடர்பான நிலைப்பாட்டில், ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, 8 பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.
ஆனால் இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாசைகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது. மேலதிகமாக இந்த ஆவணக் கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.
பொது ஆவண கடிதம் நிராகரிப்பு தொடர்பாக, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
மலையக தமிழரின் அபிலாசைகளை முன்னிறுத்தி ஆவணக்கடிதத்தில், பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.
இப்பின்னணியில், தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்ற முடிவை எடுக்கப்பட்டுள்ளது என்பதோடு, ‘உரிமைக்கு குரல் கொடுப்போம்; உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற எமது கொள்கை தொடரும் என கூட்டாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.