திருகோணமலை விபத்துகள்

திருகோணமலை கந்தளாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு விபத்துகளில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில், நேற்று (10.01) மாலை 6.00 மணியளவில் டிப்பர் வாகனத்திற்குள் சிக்குண்டு 76 வயதான ஏ.எச்.சாவுல் ஹமீட் என்ற வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரது வீட்டுக்குப் பின்னாலுள்ள காணிக்குள் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றி வந்து அதனை இறக்குவதற்காக டிப்பர் சாரதிக்கு இடத்தை காண்பிக்கும் வேளையில், கால் சிக்கி கீழே விழுந்துள்ள நிலையில் பின்புறமாக வருகை தந்த டிப்பர் வாகனத்தின் டயருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7.45 மணியளவில் திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீனக்குடா விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த விமானப்படை உத்தியோகத்தர்களான ஆர்.எம். நுவன் சமீர பண்டார (32 வயது) மற்றும் சுரங்க கருணாரத்ன (43 வயது) ஆகிய இருவருமே திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(திருகோணமலை நிருபர்)

திருகோணமலை விபத்துகள்

Social Share

Leave a Reply