மே 18 இனப்படுகொலை தினத்தை கனடாவில் இனப்படுகொலை நாளாக பிரகடனம் செய்தமைக்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியினால் கொண்டுவரப்பட்ட முன் மொழிவினை ஏற்று ஆதரவு வழங்கிய கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியில் கட்சிகள், கனேடிய மக்கள், கனேடிய வாழ் தமிழ் சமூகம் ஆகியோருக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக கடிதத்தில் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். அத்தோடு தமிழரின் பூர்வீக நிலங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள், பெளத்த விகாரைகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளை மீறி நடைபெற்று வருகின்றன என்பதனையும் சிறீதரன் தான் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிலையான அரசியல் தீர்வுக்கான வாக்கெடுப்பு சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களது கண்காணிப்பில் நடாத்தப்படவேண்டும், அதுவரைக்கும் தமிழ் மக்கள் தங்களையும், தங்கள் நிலங்களையும் பாதுகாப்பதற்கான இடைக்கால ஆட்சி திட்டம் ஒன்றினை உருவாக்குதல், போர் குற்ற விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்து, கொலை குற்றங்களை செய்தவர்களையும், சித்திரைவதைகளை புரிந்தவர்களையும் தண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக வேண்டுகோளை முன் வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
