நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரி அதிகரிப்புக்கான அனுமதியினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரி அதிகரிப்பு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதும் நடைமுறைக்கு வரும்.
பெறுமதி சேர் வரி 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பு வரி 11.25% இலிருத்து 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
பந்தயம் மற்றும் விளையாட்டுக்களுக்கான வரி 10% இலிருத்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களது வருமான வரி 24 சதவீதத்திலிருத்து, 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாவித்த கட்டட பொருட்கள், படகு தயாரிப்பு போன்றனவற்றுக்கான வரிகளும் மாற்றப்பட்டுள்ளன.
2019 இன் பிற்பகுதியில் இலங்கை குறைந்த வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சீர்திருத்தங்களில் பெறுமதி சேர் வரி (VAT), தனிப்பட்ட வருமான வரி (PIT) மற்றும் நிறுவன வருமான வரி (CIT) ஆகியவற்றின் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் பெறுமதி சேர் வரி, தனிப்பட்ட வருமான வரி ஆகியவற்றின் வரித் தளங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வரி விலக்குகள், மற்றும் செயல்படுத்தப்பட்ட சேவைகள், வரி விலக்குகள் மற்றும் வரி விடுமுறைகள் போன்ற ஏராளமான வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 600 பில்லியன் – 800 பில்லியன் வரி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் வரி அதிகரிப்பு செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கான வருமானத்தை அதிகரிக்க செய்யலாம் என நம்பப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இந்த வரி அதிகரிப்பு காணப்படுகிறது.
