துறைமுக முறைகேடுகளை தடுக்க ஜனாதிபதி பரிந்துரை

நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (09.06) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைத் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

“கொழும்பு துறைமுகமானது உலகின் அனைத்து முன்னணி கப்பல் நிறுவனங்களுடனும் இயங்குகிறது. நிர்வாக சபை உட்பட முழு ஊழியர்களும் பொறுப்புடன் செயற்பட்டு அதனைப் பாதுகாக்க வேண்டும்.

சட்டத்தை மீறி செய்யப்படும் இறக்குமதிகளால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சதொச மற்றும் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களால் அத்தகைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஊழல் மோசடிகளை தடுக்க முடியும் எனவும் அரசாங்கத்துக்கு வருமானத்தை ஈட்ட முடியும்” எனவும் ஜனாதிபதி கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு துறைமுகத்தின் இளம் ஊழியர்களுக்கான பயிற்சிப் பிரிவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தினதும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினதும் நிர்மாணிப் பணிகளில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, குறித்த காலத்திற்குள் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிக்கலுக்குள்ளான ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டமையினால் நிலைமையை ஒரு வெற்றிகரமான முடிவுக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை வெளியிடடனர். இவ்வாறான சம்பவங்களை கையாள்வதில் நாடு மற்றும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வலுவான புரிதலுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

துறைமுக முறைகேடுகளை தடுக்க ஜனாதிபதி பரிந்துரை

Social Share

Leave a Reply