இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளடங்கிய தொடரை இலங்கை அணி கைப்பற்ற இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்து 292 ஓட்டங்களை துரத்தியடிப்பது இலகுவானதல்ல. இலங்கை அணி அதனை செய்துள்ளது.
பத்தும் நிசங்க, குஷல் மென்டிஸ் ஆகியோரது மிகவும் சிறப்பான துடுப்பாட்டம் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடிக்க பெரிதும் உதவியது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது. இதில் டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், அரோன் பிஞ்ச் 62 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெப்ரி வன்டேர்சய் 3 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே, டுஸ்மாந்த சமீர, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 137 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இது அவரின் முதற் சதமாகும். குஷல் மென்டிஸ் 87 ஓட்டங்களை பெற்ற வேளையில் தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 170 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜய் ரிச்சட்சன் 2 விக்கெட்களையும், ஜோஸ் ஹெசல்வூட், கிளன் மக்ஸ் வெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இலங்கையி அணி, அவுஸ்திரேலியா அணிக்கெதிராக துரத்தியடித்து பெற்ற கூடுதலான ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை பெற்றுக் கொண்டது. இதற்க்கு முன்னர் 281 ஓட்டங்கள் சாதனையாக காணப்பட்டது.
போட்டியின் நாயகனாக பத்தும் நிசங்க தெரிவு செய்யப்பட்டார்.
நான்காவது போட்டி நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
