ஏற்படப்போகும் உணவு பஞ்சத்துக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் உதவேண்டும்.

சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“எங்களுடைய கைகளில் ஆட்சி அதிகாரம் இருந்தால் பிரச்சனைகளுக்கான தீர்வினை எங்களாலேயே பெற்றுகொள்ள முடியும். அத்துடன் வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்” என சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஒரே கட்டிடத்தில் எட்டு மதத்தினருக்கான வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள House of Religions – Dialogue of Cultures என்று அழைக்கப்படும் இடத்திக்கு தான் சென்றிருந்ததாகவும், அதன்போது அங்கு காணப்படும் இலங்கையின் அரிய வரலாற்றுத் தொகுப்புகளை கொண்ட நூலகத்திற்க்கும் சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ள சாணக்கியன்

வெளிநாட்டிலே ஒரே இடத்தில் எட்டு மதங்களை கொண்ட இடம் உள்ளது போல் எல்லா வளமும் உள்ள எமது நாட்டில் உள்ள நான்கு மதத்தவர்களும் குறிப்பாக மூன்று சமூகத்தவர்களும் அவர்களுக்குரிய உரிமையோடு இன மத நல்லிணக்கத்தோடு சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்தோம் எனில் தற்பொழுது நாட்டில் நடக்கும் இவ்வாறான நிலைமை எமக்கு எக்காலத்திலும் வராது என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகளின் பின்னர் சுவிட்சர்லாந்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் கீழ்வரும் விடயங்களை தெரிவித்துள்ளார்.

இன்று எங்களுடைய அரசியலை பொறுத்தவரையில், தமிழர்களுக்கு இரண்டு வகையான அரசியல் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முதலாவது எங்களது கடந்த கால வரலாறுடன் நாங்கள் எவ்வாறு முகங்கொடுப்பது. அதாவது 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும், அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விடயம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் 2009 இற்கு முதல் இருந்தே தொடர்கின்ற விடயங்கள்.

இவற்றில் எதிர்காலத்தில் எங்களுக்கு இருக்கின்ற விடயங்களை பார்த்தால் அரசியல் தீர்வு என்ற விடயம் எங்களுக்கு மிக மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. இவற்றை நாம் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்.

நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசி வருகின்றோம். குறிப்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.

குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஏன் சாணக்கியன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றார் என்று பலரும் கேட்கின்றார்கள். நாங்கள் குருந்தூர் மலையினை சென்று பார்வையிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் காணி அபகரிப்பிற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்திருக்கின்றேன். அவற்றினை எதிர்த்திருக்கின்றேன். இன்னும் இருப்பேன்.

எங்களுடைய அரசியல் தீர்வின் ஊடாகவே இவற்றினை மாற்றியமைக்க முடியும். எங்களுடைய கைகளில் எங்களுடைய அரசியல் அதிகாரம் இருந்தால் நாங்கள் இதனை மாற்றியமைக்கலாம். எனினும் இது நீண்டகால போராட்டமாக இருகின்றது. இலங்கை வரலாற்றில் இதுதான் எங்களுடைய காலமாக இருக்கலாம்.
நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது அவரிடம் மிக முக்கியமாக சொன்ன விடயம், வடக்கு, கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக எங்களது புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள். ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம். எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

எங்களது எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என சொன்னால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும். முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் வருகை தந்த பிள்ளையானும், வியாழேந்திரனும், நஸீர் அஹமட்டுன் இணைந்து தற்போது பணியாற்றுகின்றனர். எனவே அரசியல் இலாபங்களுக்காக வாய்களில் வந்த அனைத்தினையும் சொல்லக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் இருக்காது முஸ்லீம் மக்களுக்கும் இருக்காது.

ஏற்படப்போகும் உணவு பஞ்சத்துக்கு புலம் பெயர் தமிழ் மக்கள் உதவேண்டும்.

Social Share

Leave a Reply