21 ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்ட சீத்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் 21 ஆம் திருத்த சட்டத்துக்கு அமைச்சரவையில் அழுத்தம் வழங்கியதாக ஹரின் மேலும் தெரிவித்துள்ளார்.
21 ஆம் திருத்த சட்ட மூலம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, கலந்துரையாப்பட்டு தயாராக இருந்த நிலையிலும், அமைச்சரவை அனுமதி வழங்காமல் பிற்போடப்பட்டு வந்தது. இவ்வாறான சூழ் நிலையிலேயே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்ட தொடர் ஆரம்பித்ததுள்ள நிலையில் இந்த அமைச்சரவை அனுமதி அதிலும் தாக்கம் செலுத்துமென நம்பப்படுகிறது.
21 ஆவது திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும். 19 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய அரசியலமைப்பின் 20A இந்த திருத்தத்தின் மூலம் இரத்து செய்யப்படும்.
இந்த புதிய திருத்தத்தின் மூலம், ஜனாதிபதி, அமைச்சரவை, ஜனாதிபதி தேசிய குழு, ஆகியன பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். பாராளுமன்றம் நியமிக்கும் பதினைந்து குழுக்களது நியமனங்கள் மற்றும் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்குள் உள்ளடங்கும்.
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலே அமுல் செய்யப்படும். பாராளுமன்ற பெரும்பான்மையினை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சட்ட திருத்தம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
