நாட்டில் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்த, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான பலத்தை பாவிக்கும் அதிகாரம், இலங்கை சட்டங்களுக்கு அமைவாக இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. பொது உடமைகள், பொது நிறுவனங்கள், மனித உயிர்கள், வேறு முக்கிய விடயங்களை பாதுகாக்க முழுமையான பலத்தை பாவிக்கும் அதிகாரம் இராணுவத்துக்கும், பொலிசுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொது சொத்துக்களுக்கும், இராணுவத்தினருக்கும் சேதம் ஏற்படுத்தினால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்ட அதேவேளை குறைந்த பலத்தினையே இராணுவத்தினர் பாவித்தனர்.
கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர், அனைத்து கட்சி தலைவர்கள் என சகலருடனும் நடைபெற்ற கூட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடாத்துபவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க கூடாதென ஏகமனதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் நகர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறியுள்ளனர்.
நேற்று பாராளுமன்ற சூழல், சபாநாயகர் இல்லம் போன்ற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். இருவர் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் இரு துப்பாக்கிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. அவ்வாறான சூழலில் கூட இராணுவத்தினர் அமைதியாக நடந்து கொண்டனர்.
எதிர்வரும் காலங்களிலும் மக்கள் அமைதியா நடந்து கொள்ளுமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த பாதுக்காப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
