பாரளுமன்றம் நாளை கூடாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைக்காத நிலையில் நாளை பாராளுமன்றத்தை கூட்ட முடியாது எனவும், கடிதம் கிடைத்து மூன்று தினங்களுக்கு பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜனாதிபதி கடிதத்தினை அனுப்பி வைப்பதாக தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் இன்று காலை தெரிவித்திருந்தார். அவர் தஞ்சமடையும் நாட்டுக்கு சென்றதும் பதவி விலகல் கடிதம் கையளிக்கப்படும் என அநேகமானவர்கள் நம்புகின்றனர். அதேவேளை அவர் கடிதத்தினை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வார் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இன்று மாலைதீவிலிருந்து ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமாகிறார் என தகவல்கள் பகிரப்பட்டன. பின்னர் சவுதி அரேபியா விமானத்தில் செல்வதனால் சவுதி செல்கிறார் என தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. மாலைதீவிலிருந்து அவர் வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சிங்கப்பூர் செல்வதாக இருந்தால், விமானம் அங்கு சென்றடைந்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களுக்குள் கடிதம் வழங்கப்படலாம். இதவேளை சிங்கப்பூரில் அவர் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் இடம் வழங்கும் வாய்ப்புகள் குறைவு என பிபிசி செய்தியின் ஆய்வாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.
