ஜனாதிபதி தெரிவில் எதிபார்க்கப்பட்ட மும்முனை போட்டி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளார். இன்று பெரும்பான்மை கட்சியான பொதுஜன பெரமுன பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தானும் ஜனாதிபதி தெரிவில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த மூவருமே ஜனாதிபதி தெரிவிற்கான போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பொதுஜன பெரமுன பிரிவின்றி முழு ஆதரவினையும் பதில் ஜனாதிபதிக்கு வழங்கினால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
ஆனால் டலஸ் அலகப்பெரும ஜனாதிபதி போட்டியில் களமிறங்குவதனால் ஏற்கனவே உடைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சிக்குள் மேலும் உடைவு ஏற்படலாம். அதன் காரணமாக ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு குறைவடையும். ஆனால் அவர் ஜனாதிபதியாக தெரிவாக முடியாதளவுக்கு குறைவடையுமென உறுதியாக கூறிவிட முடியாது.
இவ்வாறான இருபக்க மோதலுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக சஜித் பிரேமதாச முன்னணி பெறவேண்டும். அப்போதுதான் அவரினால் ஜானதிபதியாக தெரிவாக முடியும்.
பொதுஜன பெரமுனவிலிருந்து ஏற்கவனே விலகிய 10 சுதந்திர கட்சிகளின் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன யாருக்கு ஆதரவு வழங்குவதென இதுவரையில் அறிவிக்கவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைகளில் சந்திப்புகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் அனைவரும் சஜித்துக்கு ஆதரவு வழங்கும் நிலை காணப்பட்டாலும், தற்போது டலஸ் அலகப்பெரும களமிறங்கியுள்ள நிலையில் அவர்களுக்குள் மாற்றம் ஏற்படும் நிலையும் உருவாகலாம்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நிலையில் வாக்களிப்பில் செயற்படுவார்களா அல்லது அவர்கள் மறுபக்கம் மாறும் வாய்ப்புகள் ஏற்படுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
கடந்த நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மீண்டும் 20 ஆம் திகதி வரை பேச்சுவார்தைகள், பேரம் பேசல்கள் என பல விடயங்கள் நடைபெறவுள்ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியொன்று மீண்டும் இலங்கையில் ஆரம்பித்துள்ளது.
மக்கள் இன்னமும் வீதிகளில் நிற்கின்றனர். விலை வாசிகள் உயர்ந்து நிற்கின்றன. அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. இவற்றை இந்த ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கின்றவர்கள் உணர்ந்து செயற்படவேண்டிய நிலையும் காணப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலை ஒன்றில் நாளை பாரளுமன்றம் கூடவுள்ளது. ஜனாதிபதி தெரிவுகள் 19 ஆம் திகதி நடைபெற்று 20 ஆம் திகதி இரகசிய வாக்களிப்பு நடைபெறும். கூடுதல் வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என போராட்டங்கள் தொடரும் நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால்? என கேள்வியெழும்பிகிறது.
ஜனாதிபதி தெரிவே அடுத்து கட்ட நகர்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையளவுள்ளது. ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டால் பிரதமர் தெரிவு இலகுவானதாக மாறிவிடும் என்றே எதிர்பார்க்காப்படுகிறது.
