அண்மையில் சில அமைப்புகளதும், தனி நபர்களதும் தடைகள் நீக்கப்பட்டன. அதே போன்று சில அமைப்புகள் மற்றும் நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைளை பாதுகாப்பு அமைச்சு செயற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புகள் நபர்கள் தொடர்பில் அவற்றை ஆய்வு செய்யும் அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அவை தொடர்பில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கவனமாக ஆய்வு செய்து அதன் பின்னரே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், முக்கிய புலனாய்வு திணைக்களங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளடங்கிய பாதுகாப்பு அமைச்சின் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு நிதி பங்களிப்பு செய்தமைக்காக ஐக்கிய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் 577 நபர்களும், 18 அமைப்புகளும் தடைசெய்யப்பட்டும், தடை நீக்கப்பட்டுமுள்ளன. இவற்றுள் 316 தனி நபர்களும், 6 அமைப்புகளும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 55 தனி நபர்களும் 3 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக கண்காணித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.