சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலக மட்ட ஒப்பந்தம் இலங்கையுடன் கைச்சாத்தானதாகவும், நாளை முதலாம் திகதி இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமெனவும் சர்வதேச செய்தி முகவர் நிலையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதி அடங்கலாக பலருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இன்றுடன் அவர்களது பேச்சுவார்த்தைகள் யாவும் நிறைவடைகின்றன. இந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மீள் செலுத்துகை தொடர்பில் பேச்சுவார்த்தை நாடாத்தி கடன் மீள் செலுத்துகை தொடர்பில் மீள் திட்டம் ஒன்றை உருவாக்குதல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு வழங்கப்பட முன்னர் கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடன் கடன் பெறுதல் தொடர்பில் பேசவும், கடன் கோரிக்கை முன் வைக்கவும் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானால் இலங்கையின் பொருளாதார சிக்கல் நிலையினை இலங்கை சரியான திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்படும். இதன் காரணமாக சர்வதேச முதலீடுகள் இலங்கைக்கு வரும் வாய்ப்புகளும் ஏற்படும்.