சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன்மீது மீது விவாதம் நடாத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொரோடோவும் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயாராகியுள்ள நிலையில் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விளக்கவேண்டியது அவசியம் என்ற காரணத்தினால் பாராளுமன்ற விவாதத்துக்கு இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொரோடோ லக்ஷ்மன் கிரியெல்ல கட்சி தலைவர்களது கூட்டத்தை உடனடியாக கூட்டி,பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் திகதி தொடர்பில் பேசுமாறு சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சித்திரை 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த தினங்களில் சர்வதேச நாணயத்தின் அறிக்கை மீது விவாதம் நடாத்தப்படும் வாய்ப்புகளுள்ளன.