இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், நேற்று (11.09) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.
அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.
ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார். அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நாட்டில் உள்ள 14,000 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதன் நன்மை சென்றடையும்““ என தெரிவித்தார்.
22ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கிறோம். நிர்வாகத்திற்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்நோக்குகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஐந்து இளைஞர் பிரதிநிதிகள் இவற்றுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தலைவர் மூலம் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு. உலகில் முதன் முறையாக இவ்வாறானதொரு நடைமுறை முன்னெடுக்கப்பட இருக்கிறது. இளைஞர் பாராளுமன்றத்தை சட்டபூர்வமாக்க இருக்கிறோம். பொருளாதாரக் குழுக்களை அதிகரிக்க இருக்கிறோம்.
அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, வங்கி மற்றும் நிதி பற்றிய குழு என பல குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான சட்டங்களுக்கு, நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம், மேலும் பெண்கள் சமத்துவம் தொடர்பான சட்மூலமொன்றை தயாரிக்குமாறு பெண்கள் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை எதிர்க்காது. இதற்கு தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். விவாகரத்து சட்டங்களை இலகுபடுத்தி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய வாய்ப்பளிக்கப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் தமிழ் தரப்புடன் பேசினோம். தடுப்புக் காவலில் இருந்த காலம், அவர்கள் அனைவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்பவற்றை கருத்திற்கு கொண்டு, அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் சில எம்.பிகளின் கொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்கள் தவிர ஏனையவர்கள் தொடர்பில் இதன் கீழ் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வு பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன். குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, இந்த முழு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இங்கு வருமாறு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால் மறைகரம் இருந்ததா? அப்படியானால், அந்த மறை கரம் யாருடையது? சிலர் அமெரிக்கா என்கிறார்கள். சிலர் இந்தியா என்கிறார்கள். இன்னும் சிலர் சீனா என்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தான் என்கிறார்கள். அதனால் மறைகரம் எதுவென்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
அத்தோடு மேலும் விடுவிக்கக் கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீர்வு காண துரிதப்படுத்தப்படும். புனரமைப்புத் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு துரிதப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், வடக்கு பாரிய பொருளாதார மையமாக மாற்றப்படும். அபிவிருத்திகள் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விட எமக்கு அப்பகுதிகளில் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, உகந்த தேர்தல் முறை தொடர்பாக மக்களிடம் விருப்பத்தை கோருவேன். அரசியல் கட்சிகளால் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் மக்கள் சபை அமைப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மக்கள் சபைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் எதிர்பார்க்கிறோம் 2048 நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி 2023இல் இருந்து 25 வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியாமானது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஜனாதிபதி பைடன் செலுத்து வரும் அக்கறைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று வருகை தந்தததற்கு சமந்தாவுக்கும் நன்றிதெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடமும் இலங்கை வருமாறு அழைப்பை விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர்,
இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமபந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திர மற்றும் திறந்த இந்து- பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுத்தினார்.
இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிர்வாகி சமந்த பவர்(Samantha Power), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்(Julie Chung), USAID நிறுவனத்தின் பணிக்குழாம் பிரதித் தலைவர் சோனாலி கோர்டே(Sonali Korde), USAID நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர்(Anjali Kaur), USAID நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ்(Gabriel Grau), அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி அனாமிகா சக்ரவர்த்தி(Anamika Chakravorty) ஆகியோரும் கலந்துகொண்டனர்.