ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பத்தை ஏற்படுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எச்சரிக்கை அந்த கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயற்படும் எனவும், மன்னிப்பு கோரவேண்டும் எனவும் கடும் தொனியில் எச்சரிக்கை.

ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் மன்னிப்பு கோருங்கள் என கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ், தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என ஊடக சந்திப்புக்கு சென்று இருந்த ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று(28.09) ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து அதிலேயே சுகாஸ் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

பல்வேறு வகையான செய்திகள் திட்டமிட்ட முறையில் அரச சார்பு ஊடகங்களாலும் தமிழ் தேசியத்தை சிதைக்க வேண்டும் என செயற்படும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என குற்றம் சுமத்திய சுகாஸ்,

தமிழ் தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள். தெரிந்து போகிறார்களா? இல்லை தெரியாமல் போகிறார்களா ? என தெரியவில்லை எனவும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர் மீதும் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை தெரிந்தோ தெரியாமலோ அழிக்க முற்படுகிறார்கள். தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம்.

உண்மையை சொல்லும் ஊடகங்கள் எனில் நாளை இந்த செய்தியை முன் பக்கத்தில் பிரசுரியுங்கள். முடிந்தால் தவறான செய்திகளை பரப்பியமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கோருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது கருத்துக்கள் ஒரு சிலருக்கு உறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கலாம். உறுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டால் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன்.

தெரியாமல் தவறு செய்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகளில் நாம் தொடர்ந்தும் அரசியல் பேசுவோம் என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

தியாக தீபத்தின் நினைவிடத்தில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குழப்பங்களை ஏற்படுத்தி , முரண்பாடுகளை வளர்த்தார்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளி வந்த நிலையிலையே நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்களை அழைத்து குறித்த ஊடக சந்திப்பினை தமிழ் தேசிய மக்கள் முன்னையின் ஊடக பேச்சாளர் சுகாஸ் நாடாத்தி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் குழப்பங்கள் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் வெளிப்படையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடாமல், தனியே ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தி நடந்த சமப்வங்களை திசை திருப்பம் முயற்சியாக இதனை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply