கொழும்பில் தீ – நிவாரணத்துக்கு ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவு கொழும்பு, கிராண்ட்பாஸ், பாலத்துறை கஜீமாவத்தை தொடர்மாடியில் ஏற்பட்ட தீயினால் 220 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 குடும்பங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளை இழந்துள்ள 220 பேர் களனிநதி விகாரை மற்றும் மோதரை பொதுநோக்கு மண்டபத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் எந்தவித உயிரழப்புகளோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை.

60 சேரி புற வீடுகள் முற்றாக எரிந்து போயுள்ளளதாகவும், 12 தீயணைக்கும் வாகனங்கள் மூலமாக தீ கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறன நிலையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில்,, பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்கும் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply