உரம் உரிய நேரத்தில் கிடைக்கும். விவசாயத்தை ஆரம்பிக்கலாம் – அமைச்சர்

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (29.09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெரும்போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய பயிர்ச் செய்கைக்குத் தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, விவசாயிகள் எவ்வித சந்தேகமுமின்றி அடுத்த பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் பிரதிநிதிகள், உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply