நாமன் ஓஜாவின் அதிர – இந்தியா லெஜெண்ட்ஸ் சம்பியன்

இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (01.10.2022) ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நாமன் ஓஜாவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் இந்தியா அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியா லெஜெண்ட்ஸ் அணியின் இரண்டாவது சம்பியன் பட்டமாகும்.

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் முதற் பந்திலேயே நுவான் குலசேகரவின் பந்தில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் அதிரடியான துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். திலகரட்ன டில்ஷான் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. இதில் நாமன் ஓஜா ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், வினய் குமார் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் குலசேகர 3 விக்கெட்களையும், இசுறு உதான 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இதில் இஷான் ஜெயரட்ன 51 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வினய் குமார் 3 விக்கெட்களையும், அபிமன்யு மிதுன் 2 விக்கெட்களையும், ராஜேஷ் பவர், ஸ்டுவர்ட் பின்னி, ராஹுல் ஷர்மா, யூசுப் பதான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக நாமன் ஓஜா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரின் நாயகனாக இலங்கை அணியின் தலைவர் திலகரட்ண டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply