முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2010 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் பணிகளுக்காக 153 சதொச ஊழியர்களை பாவித்தமையினால் அரசாங்கத்துக்கு 4 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் இலஞ்ச விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இந்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பாரளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும், முன்னாள் சதொச தலைவர் எராஜ் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ராஜ் மொஹைடீன் மொஹமட் ஷகீர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு அப்போது கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்ட விரோதமாக சதொச ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியதாகவம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து வேறுபட்ட வழக்குகள் குறித்த நபர்கள் மீது இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை எதிர்ப்பு பிரேரணை வழங்குவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.