காலிமுகத்திடல் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராக விசாரணை

கடந்த 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெறவிருந்த நினைவு கோரல் நிகழ்வில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளைஆரம்பித்துள்ளது .

காலிமுகத்திடலில் அன்று போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் அங்கு கூடியிருந்தவர்களை விரட்டியதுடன், ஐந்து பேரை கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் குழந்தைகளுடன் வருகை தந்திருந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதன்போது குழந்தைகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று காயத்துக்குள்ளானதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறை முடிவு செய்த காரணத்தை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிர் நீர்த்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்து அதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் அந்த இடத்துக்கு வருகை தந்த வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ஒன்று கூடியவர்களை எந்த அடிப்படையில் பொலிஸ் பலத்தினை பாவித்து விரட்டியடித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இன்று வழக்கறிஞர்கள் சங்கம் காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது. அதற்கு பொலிஸார் தடையுத்தரவை கோரிய போதும் நீதிமன்றம் மறுத்ததனை தொடர்ந்து வீதிகள் சில மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் இன்று நடாத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply