முன்னாள் ஜனாதிபதியும், பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நேற்று(12.10) சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கும் எரிக் சொல்ஹெய்மின் நடவடிக்கைகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நோர்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் நோர்வே இலங்கைக்கு இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு கைகொடுக்கலாமெனவும் பேசப்பட்டுள்ளது.
கடல்சார் போக்குவரத்து செயற்திட்டங்களை இலங்கை முன்னெடுக்க முடியுமெனவும், அதற்க்கான செயற்திட்டங்களை இலங்கை அரசாங்கம் வழங்க தயாராக உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சொல்ஹெய்மிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளுக்கிடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் எரிக் சொல்ஹெய்ம் பெரியளவிலான பங்காற்றியிருந்தார். அத்துடன் பொருளாதரத்தில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார்.
தற்போதைய மோசமான சூழ்நிலையில் அவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை மூலம் நல்ல பயன்களை பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு எரிக் சொல்ஹெய்ம் நோர்வே முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.