பெல்ஜியம், மொரோக்கோ அணிகளுக்கிடையிலான உலககிண்ண காற்பந்தாட்ட போட்டியில் மொரோக்கோ அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதற்பாதி கோல்களின்றி நிறைவடைந்தது. மொரோக்கோ அணி கோல் ஒன்றை அடித்த போதும், தொழில்நுட்ப பரிசோதனையில் அது இல்லாமல் போனது.
தொடர்ந்து இரு அணிகளும் போராடிய நிலையில் 73 ஆவது நிமிடத்தில் அப்தெல்ஹமிட் சப்ரி அடித்த கோல் மூலமாக மொரோக்கோ அணி முன்னிலை பெற்றது. போட்டி நிறைவடைய சில நிமிடங்கள்(90+2) மீதமிருந்த நிலையில் ஷகாரியா அபோஹ்லால் அபாரமாக இரண்டாவது கோலை அடித்தார்.
பெல்ஜியமணி பலமான அணி. தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. இன்று வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 2 கோல் தோல்வி அவர்களுக்கு அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பையும் இல்லாமல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பெல்ஜியமணி அடுத்து குரேஷியா அணியுடன் விளையாடவுள்ளது.
மொரோக்கோ அணி உலக கிண்ணத்தில் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். 1986 ஆம் ஆண்டு போர்த்துக்கல் அணியினையும், 1998 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து அணியினையும் வெற்றி பெற்றுள்ளது.
மொரோக்கோ அணி குரேஷியா அணியுடன் சமநிலை முடிவினை பெற்றுள்ளமையினால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு மிகவும் அதிகமாக கிடைத்துள்ளது. அந்த நிலை ஏற்பட்டால் குரேஷியா அல்லது பெல்ஜியம் அணிகளுள் ஒரு அணி குறைந்தது வெளியேறும் நிலை ஏற்படலாம். எவ்வாறாயினும் இந்த குழுவில் நடைபெறவுள்ள போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.