இந்தியாவில் நடைபெற்ற உலக சாதனை யோகாசன போட்டியான GWR உலக சாதனை (GWR Global World Record ) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய டொனிஷா மயிலேந்திரன் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தலையை நிலத்தில் நிறுத்தி தலைகீழாக நிற்கும் சிரசாசனத்தில் 17 நிமிடங்கள் தொடர்ச்சியாக நின்று இந்த சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச யோகா அமைப்பின் ஊடாக, வத்தளை நகரில் அமைந்துள்ள ரிதமிக் யோகா அகாடமி சார்பாக இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் ரிதமிக் யோகா அகடமியின் நிறுவனரும், ஆசிரியருமான டொனிஷா மயிலேந்திரன் பங்கு பற்றியிருந்தார்.
இந்த வெற்றியினை பெற்று சாதனை படைத்தமைக்காக டொனிஷாவுக்கு சான்றிதழும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் யோகா யோகி எனும் பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் இந்தியாவின் அங்கிகாரத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மாணவர்களும் யோகா போட்டியில் பங்கு பற்றி சான்றிதழ் மற்றும் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.
இள வயதான டொனிஷா யோகாசனத்தை முறையாக பயின்று, தொடர்ந்தும் செய்து வருகின்றார். அத்தோடு பலருக்கும் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். உடற்பயிற்சி, உடலியக்கம் என்பன தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து வருகிறது. இவ்வாறன நிலையில் இளையவர் ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதும், உலக சாதனை படைப்பதும் பாராட்டப்பபடக்கூடிய விடயமாகும்.
டொனிஷா யோகா பயிற்சிகளை வழங்கும் அதேவேளை, முழு நேர பணியாக தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிடக்கலை வரைவாளராக பணி புரிகின்றார். மனோ தத்துவவியலில் டிப்ளமோ நிறைவு செய்துள்ளதோடு, கவுன்சிலிங் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்ட வருகிறார்.