கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தெரிவாகியுள்ளது. அமெரிக்கா அணியுடன் நடைபெற்ற போட்டியில் 3 -1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவானது நெதர்லாந்து.
கடந்த முறை உலக கிண்ண தொடருக்கு தெரிவாகாத நெதர்லாந்து அணி 2014 ஆம் ஆண்டு மூன்றாமிடத்தையும், 2010 ஆம் ஆண்டு இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
அமெரிக்கா அணி 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை.
நெதர்லாலாந்து, அமெரிக்கா அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி பெரியளவில் விறு விறுப்பை வழங்கவில்லை. நெதர்லாந்து அணி பலமாக விளையாடியமையினால் ஒரு பக்க போட்டியாக அமைந்தது.
போட்டி ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் மெம்பிஸ் டிபே கோல் அடித்து முன்னிலையினை பெற்றுக் கொடுத்தார். 46 ஆவது நிமிடத்தில் டலி ப்லைன்ட் அடித்த கோல் மூலமாக நெதர்லாந்து அணி மேலும் பலமானது. 76 ஆவது நிமிடத்தில் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் அமெரிக்கா அணியின் ஹாஜி ரைட் அடித்த கோல் மூலமாக போராடக்கூடிய நிலைக்கு சென்றது. இருப்பினும் 5 நிமிடங்களில் நெதர்லாந்து அணி மூன்றவது கோலினை டென்ஷெல் டம்ரைஸ் மூலம் பெற்று வெற்றியினை உறுதி செய்தது.
காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள நெதர்லாந்து அணி, ஆர்ஜன்டீனா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுமணியோடு காலிறுதிப்போட்டியில் மோதவுள்ளது.