இலங்கை முழுமையாக மீள வேண்டுமாக இருந்தால் சுற்றுலா துறை மேம்பட வேண்டும். அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரவேண்டும். அந்த நிலைமை தற்போது ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இந்த வருடம் சுற்றுலா துறையினால் இதுவரை 1129.4 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதில் நிறைவடைந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 107.5 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் டிசம்பர் ஆரம்பத்திலேயே கப்பலில் வருகை தந்த பயணிகள் அடங்கலாக பெரும் தொகையான பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். விடுமுறை காலம், மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடர் போன்ற காரணங்களினால் மேலும் இலங்கைக்கு சுற்றுலா துறை மூலம் வருமானம் கிடைக்குமென நம்பப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் 59,759 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் 628,017 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.
கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 104,989 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் அவர்கள் மூலமாக 273.6 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்ததாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புள்ளி விபரவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.