கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை காலை, இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்டபடுத்திய 24 வயதுடைய வர்த்தகரான மொஹமட் ரைசுல் ரிசாக் என்ற Mercedes காரின் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் கடந்த சனிக்கிழமை காலை 9.55 மணியளவில் சந்தேக நபர் டுபாய்க்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இவர் இலங்கையில் தனது பெயரில் மூன்று Mercedes கார்களை வைத்திருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலை இரவு விடுதியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த சொகுசு கார், கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் சொகுசு கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். விபத்தின்போது காரில் மூன்று பெண்களும் மற்றுமொரு ஆணும் இருந்ததாகவும், 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்கள் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
தப்பிச்சென்ற கார் சாரதிக்கு தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இரண்டு முகவரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் கொழும்பு முன்னணி ஹோட்டல் ஒன்றின் சொகுசு அறையிலேயே தங்கியிருந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை இரவு விடுதி களியாட்டத்தில் ஈடுபட்டதாகவும், விபத்து நடந்த நேரத்தில் காருக்குள் இருந்த மூன்று பெண்கள் அவரை இரவு விடுதியில் சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.