மாத்தறை திக்வெல்ல வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் திக்வெல்ல கொடகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர், தரம் 10ல் பயிலும் மாணவர்களுக்கு நாவினால் நக்கி உணுவு மேசையை சுத்தம் செய்யுமாறு கூறுவதாக வெளியான காணொளி தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர், மதிய உணவின் பின்னர் மாணவர்கள் உணவு பெறும் மேசைகளை ஒழுங்காக சுத்தம் செய்யுமாறு கூறியும் அவர்கள் அதனை சரியாக செய்யாததால் இந்த தண்டனை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
‘நல்லதுக்கு நான் நல்லவர், கெட்டது செய்யதால் நானும் கெட்டவர், நான் சொன்னது போலவே உடனடியாக நாவினால் இந்த உணவு மேசையில் உள்ள எஞ்சிய உணவுகளை சுத்தம் செய்ய வேண்டும்’ என சினிமா பாணியில் வசனம் பேசி இவ்வாறான தண்டனையை கொடுக்கும்போது மற்றுமொரு மாணவரால் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என வலையக் கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிபரை சிக்கலில் தள்ளும் நோக்கில் மாணவர்கள் இதனை பதிவு செய்துள்ளதாக பாடசாலையுடன் தொடர்புடைய பெற்றோர்கள் குழு ஒன்றும் மாணவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.