பாடசாலை புத்தக பைகளை பரிசோதிப்பது அவசியமானால், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பாவனை, விற்பனை மற்றும் ஊக்குவிப்பதை தடைசெய்து பாடசாலையை புகையிலையற்ற சூழலாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்கள் பாடசாலை, வலய மற்றும் மாகாண மட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு, இது தொடர்பில் ஆசிரியருக்கு விளக்கமளிப்பதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை சூழலை இனிமையாக்க தேவையான செயற்பாடுகளை செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.